Print this page

காந்தியின் ஆலயப் பிரவேச நோக்கம். குடி அரசு - துணைத் தலையங்கம் - 26.02.1933 

Rate this item
(0 votes)

தோழர் காந்தியவர்கள் தாழ்த்தப்பட்ட தலைவர் ஒருவருக்கு ஆலயப் பிரவேச நோக்கத்தைப் பற்றி எழுதிய நோக்கத்தில் அடியில் கண்ட குறிப்புகள் காணப்படுகின்றன. அவையாவன:- "ஆலயப்பிரவேசத்தால் மட்டும் தீண்டாமை தீர்ந்து விடும் என்று நான் நினைக்கவில்லை" "ஆனால் பிறருடன் சரிசமமாக ஆலயப்பிரவேச உரிமை பெறாதவரை தீண்டாமை தீராது” "ஆலயப் பிரவேசத்தால் பொருளாதாரம் கல்வி முன்னேற்றம் ஏற்படும்” என்ற குறிப்புகள் இருக்கின்றன. இவைகளில் ஏதாவது இன்றைய அநுபவத்திற்கு ஒத்து இருக்கின்றதா என்பதை யோசிக்கவேண்டும். இந்து மதத்தில் தீண்டாத ஜாதியார் என்கின்ற கூட்டமல்லாமல் தீண்டக்கூடிய மக்கள் பல கோடிக்கணக்கான பேர்கள் ஆலயப்பிரவேச சம உரிமையை தாராளமாய் அனுபவித்து வருபவர்களாகவே இருந்தும் பல வகுப்புகளில் இன்று நூற் றுக்கு தொண்ணூற்றேழு பேர்கள் தற்குறிகளாகவும். நூற்றுக்கு தொண்ணூற் றொன்பது பேர் போதிய இடமும் துணியும் உடையும் இல்லாமலும் அவர் களது பிள்ளை குட்டிகளுக்கு கல்வி கொடுக்கவோ நோய்க்கு மருந்து கொடுக்கவோ முடியாமலும் இருப்பதின் காரணம் என்னவென்று கேட் கின்றோம். இன்று மக்களுக்கு பொதுவாக அதாவது இந்திய மக்களுக்கு மதம், ஜாதி, தீண்டாதவர். தீண்டக்கூடியவர் என்கின்ற பாகுபாடே இல்லாமல் நூற்றுக்கு தொண்ணூறு பேர்கள் மனிதத்தன்மையிழந்து மானத்தை விற்று கஷ்ட ஜீவனம் ஜீவிக்க வேண்டியவர்களாகவும் அநேகர் அப்படிச் செய்தாலும் ஜீவிக்க முடியாதவர்களாகவும் மிருகங்களுக்கு இருக்கும் நிலை மையும் இல்லாமலும் இருந்து வருகிறார்கள். இதற்குக் காரணம் என்ன? இப்படிப்பட்டவர்களுக்கு என்ன மார்க்கம்? என்றுதான் கேட்கின்றோம். ராட்டினத்தையும் கோவிலையும் காட்டுவது யோக்கியமான மார்க்கமா? மோசடியான மார்க்கமா? என்பதை வாசகர்களே யோசித்துப் பாருங்கள். இப்பொழுது தீண்டக்கூடிய மக்களுடைய பட்டினிக்கும், படிப்புக்கும் காந்தி யார் கண்டு பிடித்த மருந்து ராட்டினமாகும். தீண்டப்படாத மக்களுடைய பட்டினிக்கும் படிப்புக்கும் காந்தியார் கண்டு பிடித்திருக்கும் மருந்து ஆலயங்கள் ஆகும். ஆகவே இந்த வைத்தியரின் சக்தியை நீங்களே மதியுங்கள். இந்த மாதிரி வைத்தியங்களால் காந்தியார் பணக்காரர்களுக்கும், பணக்காரர் கொள்கைகொண்ட அரசாங்கத்திற்கும் உள்ஆளாய் இருந்து உதவி செய்தவர் ஆகிறாரா அல்லது ஏழைகளுக்கும் தீண்டப்படாத மக்களுக் கும் நண்பராய் இருந்து உதவி செய்வராகிறாரா என்பதை உணர்ந்து பாருங்கள். 

குடி அரசு - துணைத் தலையங்கம் - 26.02.1933

 
Read 101 times